பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 30, 2012

சித்திரை எட்டாம் நாள் :: அங்கயற்க்கன்னிக்கு பட்டாபிஷேகம்!


Apr 29, 2012

சித்திரை ஏழாம் நாள் :: நந்தியின் சித்தரிப்பு!


சித்திரை ஆறாம் நாள் :: ரிஷப வாகன தரிசனம்!

Apr 27, 2012

சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் பாடம் :: மனக்குதிரையை அடக்கு!


Apr 26, 2012

சித்திரை நான்காம் நாள் :: மறைத்தல் ஈசனின் லீலை!


Apr 17, 2012

அவளுக்கு மாட்டிய மணாளன்


"ஆனந்த், போஸ்ட்!!!" என்றபடியே தபால்காரன் எதையோ தூவி விட்டு சென்றான்.

படுக்கையிலிருந்த நான் சோம்பல் முறுக்கி கண் திறந்தேன். கடிகாரம் பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. நேற்றிரவு வேலை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது மணி அதிகாலை மூன்று. அம்மாவும் அப்பாவும் தஞ்சாவூர் கோயிலுக்கு சென்றிருந்தார்கள். அசதியில் இதோ இதுவரை உறங்கிவிட்டேன்

வாசலுக்கு சென்று, வந்த தபாலை பார்த்தேன். எனக்கு யாரோ திருமண அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறார்கள். மணமக்கள் பெயர் பார்த்தேன். என் காதலியின் பெயர் அதிலிருந்ததில் எனக்கு ஆச்சர்யமில்லை. தேதியை பார்த்தேன்.அடுத்த ஞாயிறு திருமணம்.

உள்ளே வந்து பத்திரிக்கையை மேசை மேல் வைத்துவிட்டு, குளிக்க சென்றேன். அந்த அழகான தருணங்களில் நீரோடு நானும் மூழ்க தொடங்கினேன்.

பிரேமாவும் நானும் கல்லூரி முதல் ஆண்டிலிருந்தே ஒருவரை ஒருவர் விரும்பதொடங்கிய காலம். இன்றைக்கு உள்ள செல்போன், கணிணி போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் இல்லாத காலம். கல்லூரியில் பார்த்தால் மட்டுமே உண்டு

வேறெங்கும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் வாய்ப்புகள் மிகக்குறைவு. காரணம் இருவர் வீட்டிலும் கண்டிப்பு.

சக மாணவர்க்கு தெரிந்தால் கிண்டல் செய்வார்கள் என்றெண்ணி நாங்கள் இருவரும் கவனாமாக நடந்து கொண்டோம். வெறும் கடிதங்களில் மட்டுமே எங்கள் காதல் முதல் வருடம் முழுதும் தொடர்ந்தது. எப்பொழுதாவது வீட்டு தொலைபேசியிலிருந்து, அவள் தன் தோழியுடன் உரையாடுவது போலவும், நான் என் தோழனுடன் அரட்டைஅடிப்பது போலவும், மணி கணக்கில் பேசுவோம்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று தொடங்கி இரு வருடங்கள் கடந்தன. இந்த இரு வருடங்களில், நாங்கள் கல்லூரியை விட்டு வெளியே சந்தித்தது சில முறைதான். ஆனால், நாங்கள் இருவரும் தெளிவாக இருந்தோம், ஒன்று சேர்வதில்

பின்னர், மே தின விடுமுறை வந்தது. முதல் நாள் கல்லூரியில் எங்கள் இருவருக்கும் பந்தயம்.

"என்ன ஆனந்த்? நாளைக்கு என்னைய பார்க்காம சார் என்ன பண்ண போறீங்க?"
"உன்னை பார்க்கத்தான் போறேன்"
"என்ன உளர்றே? நான் வெளியே வரமாட்டேன்பா"
"நிஜமாதான்"
"உன்னால முடியாது"
"அட.. கண்டிப்பா நாளைக்கு நான் உன்னைய பார்ப்பேன். பந்தயமா?"
பிரேமா யோசித்தாள்.
"பந்தயம். ஆனா போன் பண்ணிட்டு மொட்டை மாடிக்கு வா, அங்கே வா, இங்கே வான்னு சொல்லகூடாது"
"சரி. ஆனா, நாளைக்கு நாம ரெண்டு பேரும் பார்க்கத்தான் போறோம்"
"சரி."


மறுநாள் காலை பிரேமா வீட்டு வாசலில் சைக்கிளோடு நின்றிருந்தேன். அவள் வீட்டு நாய்தான் முதலில் என்னை அடையாளம் கண்டு குறைத்து வரவேற்றது. வெளியே வந்தார் பிரேமாவின் அப்பா.

"யாருப்பா நீ? என்ன வேணும்?"
"அங்கிள், பிரேமா வீடு இதுதானே?"
"ஆமா. நீ யாரு?"
"நான் அவள்கூட படிக்கிறேன். நேத்திக்கி.."
"கூட படிக்கிறீங்கன்னா காலேஜோட இருக்கவேண்டியாதுதான? இங்க என்னபா வேலை?"
பிரேமாவின் அப்பாவிற்கு என்னை பிடிக்கவில்லை. சொதப்பாமல் சமாளித்தேன்.
"இல்ல அங்கிள்.நேத்திக்கி..."
மீண்டும் எனை முறைத்தார்.
"இல்ல சார்.. நேத்திக்கி உங்க பொண்ணு பரீட்சைக்கு வேண்டிய புக்கை அவ பிரெண்டுகிட்ட விட்டுட்டு வந்துட்டாங்க. அவங்களால வர முடியல. என்கிட்டே குடுத்து அனுப்பினாங்க. அதான் சார் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்."
புத்தகத்தை வாங்க கை நீட்டினார், பிரேமாவின் அப்பா. நானும் தந்தேன்.
"சரிப்பா. நான் கொடுத்துகுறேன்"
"தேங்க்ஸ் சார் "

திங்கட்கிழமை பிரேமா அழுதபடியே என்னிடம் வந்தாள்.
"ப்ளீஸ் இனிமே இப்படி பண்ணாதே. படிப்பு முடியுற வரைக்கும் எங்கப்பா என்னைய எவன்கிட்டயாச்சும் பிடிச்சு குடுக்காம இருக்கறதே பெரிய விஷயம். அன்னைக்கி நான் ரொம்ப பயந்துட்டேன் ஆனந்த். புக் வேணும்னா என்கிட்டே சொல்லியிருந்தா நானே வாங்கிவந்திருப்பேன். எதுக்கு வீட்டுக்கு ஆள் வராங்கன்னு என்னைய திட்டினார்"

"குட். நல்ல அப்பா. ஒரு இருபது இருபத்தஞ்சு வருஷம் கழிச்சி இப்படி ஒரு அப்பனா இன்னைக்கி பசங்க இருப்பாங்களான்னு சொல்ல முடியாது பிரேமா" என்று சொல்லி சிரித்தேன்.

"இது சிரிக்கிற விஷயம் இல்ல."

"சரிம்மா. சீரியசாவே பேசறேன். இது சாதாரண விஷயம்தான். புருவம் தூக்கி அப்படி பார்க்காதே. எனக்கு பிடிக்கல. நமக்கு இப்படி ஒரு சவால் இருந்தாதான் நல்லா இருக்கும். இல்லேன்னா ரொம்ப போர் கண்ணம்மா. சரி. நீ சொல்ற மாதிரிதான் எனக்கும் படிப்பு முக்கியம். நான் என்ன நல்லா படிக்கலையா? இல்லியே! எனக்கும் குடும்ப பொறுப்பு இருக்கு பிரேமா. ஆனால், அப்பப்போ இப்படி சின்னசின்ன சுவாரஸ்யத்த நாமதான் எற்படிதிக்கணும். காதலிக்கிறேன்னு 
தைரியமா சொன்ன பொண்ணு நீ, இப்போ ஏன் பயப்படுற?"

"நாம நல்லபடியா ஒண்ணு சேரணும்னு தான் பயப்படுறேன் ஆனந்த். இது ஒன்னும் சினிமா இல்ல. எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஓடி வர்றதுக்கு."

சிரித்தேன். "என்ன நீ? இன்னிக்கி இப்படி பேசுற? இதெல்லாம் காதலிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்க வேண்டிய விஷயங்கள்." 

நான் நிறுத்தினேன். என் மூளைக்கு எங்கோ தவறு நேர்வது தெரிந்தது.

"சரி பிரேமா. இப்போ இதை கொஞ்ச நேரத்துக்கு தள்ளி வைப்போம். க்ளாஸ் போகலாம். டைம் ஆச்சு."

அன்றிலிருந்து பிரேமாவிடம் என்னால் கல்லூரி முடிந்து வீட்டிற்கு போன் செய்து பேச முடியவில்லை. காரணம், அவள் அப்பா. நான் தொடர்பு கொண்டபோதெல்லாம் அவரே எதிர்முனையில்.கல்லூரியும் முடிந்தது. இனி, அவளிடம் தொலைபேசியில் மட்டுமே உரையாட முடியும் என்ற சூழலில் ஒரு  நாள்...

"ஹலோ"
"ஹலோ லக்ஸ்மன் காந்தி இருக்காரா?"
"ஹலோ.. எத்தனை தடவை சொல்றது? இங்கே யாரும் அப்படி இல்லை."

போன் கட் ஆனாது.சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டேன். முதல் மணி ஓசையிலேயே பிரேமா பதிலளித்தாள்.

"ஆனந்த்.. இனிமே நாம அடிக்கடி போன் பேச முடியாது. அப்பா காலர் ஐடி வாங்கி வச்சிட்டார்."
"என்ன பிரேமா இப்படி பயப்படுற?"
"மன்னிச்சிடு ஆனந்த். இனியும் நான் பொய் சொல்ல விரும்பல. இது ஒத்துவராது."
"எது ஒத்துவராது ?"
"நம்ம லவ்"
"அப்போ, இதுக்கு முன்னாடி மட்டும் எப்படி ஒத்துவந்தது?"
"ஆனந்த், ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. உன்னோட குடும்பம் உன்னைய ரொம்ப நம்பியிருக்கு. அப்பா,அம்மா ரெண்டு பேரையும் நீதான் காப்பாத்தனும்.படிச்சு முடிச்சிட்ட. நல்ல வேலைக்கு போ. அப்புறம்.."
"ஒரு நிமிஷம்.. இந்த சிந்தனை எத்தனை நாளா ஓடிகிட்டு இருக்கு?"
"கொஞ்ச நாளாதான்.."
"ஏன்?"
"ஆனந்த்.. உனக்கே தெரியும். எங்க சாதியில இந்த மாதிரி நடந்தா கொன்னே போட்ருவாங்க."
"ஸோ..? இப்படி பின் வாங்கறதுக்கு அது எவ்வளவோ தேவல."
"கொஞ்சம் பிராக்டிகலா யோசி. இது நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கை. கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கணும் நீ. கஷ்டமாதான் இருக்கு, ஆனாலும், சொல்றேன் ஆனந்த். நாம இப்போ பிரியரத தவிர வேற வழியே இல்லை.."
"பிரேமா.."
"நான் முழுசா சொல்றத வாங்கிகிட்டு பேசு. ஆரம்பத்துல எங்க வீட்ல பேசி சமதானப்படுத்திரலாம்னு தான் நெனச்சேன். ஆனா, போக போக கஷ்டம்னு இப்போ தான் புரியுது. அதனாலதான் மறைக்காம உன்கிட்ட இப்போவே சொல்றேன். இது ஒத்து வராது ஆனந்த். நிறைய அடி வாங்கணும். அதை மனசார தாங்க நம்ம ரெண்டு பேராலயும் முடியாது."

கோபத்தில் கத்தினேன்.. "நீயெல்லாம் என்ன .."

"ஆனந்த்.. ப்ளீஸ், சொல்றத கேளு. கோபப்படாத. நாலஞ்சு வருஷம் கழிச்சி இதை திருப்பி பார்த்தேனா, நான் இன்னைக்கி எடுத்த இந்த முடிவு நம்ம ரெண்டு பேரோட நல்லதுக்குதான்னு உனக்கே புரியும்."

விபரம் தெரிந்து முதல் முறையாக அழுகையில் என் குரல் தழுதழுத்தது..

"பிரேமா.. ஹர்ட் ஆகுது. இதுல நான் என்ன தப்பு பண்ணேன்? நீ ஈஸியா சொல்ற. நீ இல்லாம எப்படி?"

"ஆனந்த்.. அவ்ளோதானா நீ என்னைய புரிஞ்சுகிட்டது? இது ரொம்ப கஷ்டமான முடிவு. ஈஸியா சொல்ற மாதிரி உனக்கு தெரியுது. நான் இல்லாம இனி எப்படிநெல்லாம் நீ யோசிக்காத. இது ரீல்இல்லை. ரியல். வலிக்கத்தான் செய்யும். ஆனா, நான் சொல்றது நம்ம ரெண்டு பேரோட நல்லதுக்கு தான்."

கண்ணீரை தவிர மேலும் வேறொன்றும் வரவில்லை.

"இனிமேல் எனக்கு போன் செய்யாதே. மூவ் அஹெட் ஆனந்த். ஆல் தி பெஸ்ட்!"

எனக்கு அழுகை பீறிட்டது...

"ஆனந்த்.. ப்ளீஸ் ஏதாவது பேசு" எதிரில் அவளும் அழுதாள்.

இணைப்பை துண்டித்தேன்.

ஷவரின் குழாயை மூடினேன். வெளியே வந்து முகம் பார்த்தேன். கண்கள் சற்றே கலங்கி இருந்ததை கண்ணாடி காட்டிக்கொடுத்தது. வலி. ஒரே காதலின் வலி. முதல் காதலின் வலி. ஆறு வருடங்கள் கடந்தும் அவ்வளவு வலி

செல்போன் ஒலிக்க என் கவனம் கலைந்தது. ஆபீஸ் கார் டிரைவர் என்னை அழைத்தார்.

"சொல்லுங்க அண்ணே"
"சார்.. எத்தனை மணிக்கு சார் பிக்கப் பண்ணனும்?"
"மூணு மணிக்கு வாங்கண்ணே"
"ஓகே சார்"

அழைப்பை முடித்துவிட்டு பின்திரும்பினேன். காலண்டர் தேதி என் நினைவுகளை மீண்டும் திருப்பி பார்க்க செய்தது. சென்ற வருடம் இதே நாள், பிரேமாவிடம் இருந்து ஒரு நாள் அழைப்பு வந்தது.

"எப்படி இருக்கே ஆனந்த்?"
சில நொடிகள் தாமதித்த பின்னே, "நல்லா இருக்கேன். நீ?"
"ம்ம்.நல்லா இருக்கேன். கோபமெல்லாம் இல்லையே? எங்கே இருக்கே? பேசலாமா?"
"என்ன பேசணும்?" வெறுப்பாய் கேட்டேன். என் குரலின் தன்மை என்னவளுக்கு நன்கே புரிந்தது.
"சாரி ஆனந்த், உனக்கு என் மேலே இன்னும் கோபம் போகலேன்னு நினைக்கிறேன். இத்தனை.."
"ஆமா"
"ஏன் இப்படி வெடுக்குன்னு பேசற? இத்தனை வருஷம் கழிச்சி பேசுறேன்ல. ஏன், எதுக்குன்னு யோசிக்க மாட்டியா?"
"யோசிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு?"
"ஓகே. யோசிக்க வேணாம். நீ எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா இருப்பேன்னு நினைச்சு தான் கூப்பிட்டேன். சாரி, இனி கூப்பிடல. பை!"
"பை!!"

அவள் எண்ணை அப்பொழுதே போனில் இருந்து அழித்துவிட்டேன்.

மேசை மேல் இருந்த அழைப்பிதழை மீண்டும் பார்த்தேன். இந்த முறைதான் மணமகன் பெயரை தெளிவாக பார்த்தேன். வேறு மதம். யாரோ என் தலையை சுத்தியலால் ஓங்கி அடித்தது போலிருந்தது. அழைப்பிதழை முழுமையாய் பார்க்கலாமென்று கவரை பிரித்தேன். உடன் ஒரு கடிதமும் இருந்தது.

அன்புள்ள ஆனந்த் அவர்களுக்கு,

அவசியம் திருமணத்திற்கு வரவும். இது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல. பிரேமாவின் விருப்பமும் கூட.மற்றவை நேரில்!

மாப்பிள்ளையின் கையொப்பத்துடன் முடிந்தது கடிதம். எனக்கு எல்லாம் புரிந்தது. என்னிடம் தொடர்பு கொள்ள பிரேமாவின் எண்ணும் இல்லை. அழைப்பிதழிலும் வேறு எண் குறிப்பிடப்படவில்லை. வாழ்க்கை தரும் வித்தியாசமான ஆச்சர்யங்களை எதிர்கொள்ள தயாரானேன். இதுவும் கடந்து போகும் என்று மட்டும் தோன்றவில்லை

முதல்நாள் நிச்சயதார்த்ததிற்கே சென்றேன். மண்டபத்தின் வாசலில் பூக்களின் தோரணங்களுடன் மணமக்கள் பெயர் சூடப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் மணமகன் அறை விசாரித்து சென்றேன். கதவை திறந்து உள்ளே எட்டி பார்த்தேன். யாரும் இல்லை. திரும்பிய கணம் சட்டென்று ஒரு முகம் என்னை புன்னகையுடன் வரவேற்றது.

"ஹலோ ஆனந்த்.. எப்படி இருக்கீங்க?"
"நீங்க?"
கண்ணடித்தார் "நான் தான் மாப்பிள்ளை. வாங்க..வாங்க!! நாம பிரேமாகிட்ட போகலாம். பேசலாம்."
"சார் சார், ஒரு நிமிஷம்.."
"என்ன சொல்லுங்க?"
"இல்லை.. என்னைய எதுக்கு கல்யாணத்துக்கு வர சொன்னீங்க?"
"அதான் வாங்க.. பிரேமாகிட்ட போகலாம்"
"இல்லை சார்.. நான் வரல."
"அட வாங்க.. நானே கூப்பிடுறேன். பிரேமா உங்கள பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவா."

இந்த முறை நான் பிடிவாதமாய் நின்றேன்.

"சாரி சார். நீங்க தப்பா எடுத்துக்கலேனா நாம ரெண்டு பேரு மட்டும் பேசலாமா?" என்றேன்.
"ரொம்ப பீடிகை போடுறீங்க. சரி பரவால,வாங்க"

மண்டபத்தின் மாடிக்கு சென்றோம். நானே தொடங்கினேன் .

"நீங்க தான் பத்திரிக்கை அனுப்பினதா?"
"ஆமா ஆனந்த். நான் முழுசா எல்லாத்தையும் சொல்லிறேன். உங்களோட காதல் பிரிஞ்ச அதே காரணம் தான் எங்களோட காதல் கல்யாணத்துல முடியிறதுக்கும் காரணம். நானும் பிரேமாவும் ஒரே காலேஜ்ல வேலை பார்த்தோம். எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, அவ ஆரம்பத்துல விலகி போனாள். ஒரு கட்டத்துல, அவளே உங்களோட பழகினத சொன்னா. அப்புறம் தான் புரிஞ்சது,நான் என்னென்ன பிரச்சனைகள சந்திக்கனும்னு. முதல்ல பிரேமா 
மனசுல இருந்து ஆரம்பிச்சு அப்பறம் அவங்க அப்பா, அம்மா சொந்தக்காரங்கன்னு எல்லாரோட மனசையும் ஏத்துக்க வைக்க எனக்கு ரொம்ப நாள் தேவைப்பட்டது. இதெல்லாம் நான் ஏன் உங்ககிட்ட சொல்லனும்னு நீங்க யோசிக்கலாம். ஒரு காதல் பிரிஞ்ச வலியிலதான் என்னோட காதல் சேர்ந்திருக்கு. பிரேமா மட்டும் இல்லை, உங்களோட நெருங்கின நண்பர்கள் வட்டமும், நீங்க இன்னும் எதார்த்தமான வாழ்க்கைக்கு திரும்பலேன்னு
சொன்னாங்க. இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை. அதை சந்தோஷமா வாழ்ந்துட்டு போலாமே. நீங்களும் ஒரு கல்யாணம் பண்ணி வாழ்க்கைல செட்டில் ஆயிட்டா உங்கள சுத்தி இருக்கறவங்களும், ஏன் நீங்களும் சந்தோஷமா இருக்கலாமே."

"சார், நான் தெளிவா சொல்லிடுறேன். பிரேமா மட்டும் இல்லை, யாராலையும் நான் எதார்த்த வாழ்க்கைக்கு திரும்பலேன்னு சொல்ல முடியாது சார். எப்போ பிரேமா என்னைய புடிச்சிருக்குன்னு சொன்னாலோ, அப்போவே அவ என் மனசுல ஒண்ணாயிட்டா. என்னால இன்னைக்கி வரைக்கும் அவளை மறக்க முடியல. தெரியல. என்னோட முடிவு என்னோட போகட்டும். நான் ஒரு சுதந்திர பறவையா வாழ்றது மத்தவங்க பார்வைக்கு எப்படியோ தெரியலாம். அடுத்தவங்க எண்ணத்துக்கு நாம என்னைக்குமே பொறுப்பேத்துக்கிறது முட்டாள்தனம். ஒரு வேளை நீங்க எல்லாரும் சொல்ற எதார்த்த வாழ்க்கைல நான் இல்லைனே வச்சிக்குவோம். ஆனா, எனக்குன்னு ஒரு உலகம் இருக்கு. அதுல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அப்பப்போ சின்ன சின்ன வருத்தம் இருந்தாலும் அதையே நெனச்சுகிட்டு இருக்கறதுக்கு நான் ஒன்னும் குழந்தை இல்லை சார்"

"அப்போ ஏன் நீங்க இன்னும் உங்களுக்கான துணையை தேர்ந்தெடுக்கல? அதுக்கு காரணம் தான்தான்னு பிரேமா ரொம்ப வருத்தபடுறா.."

"அது என்னோட சொந்த விஷயம். கண்டிப்பா இல்லை. அவ சின்ன பொண்ணு சார். அது வெறும் பரிதாபம். அது ஒன்னத்துக்கும் உதவாது. என்னையவிட வயசுல நீங்க மூத்தவர்ங்கற மரியாதைக்காக தான் நான் நீங்க கூப்பிட்ட உடனே வந்தேன். இனி, இது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை. தேவையில்லாத எண்ணத்துக்கு இடம் வேணாம்.நான் என்னைய சொன்னேன். என்னால சத்தியமா உங்க ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் வராது. என்னைய நீங்க உங்க மனசுல இருந்து அழிச்சுடலாம். இதுவே நாம சந்திக்கிறது கடைசியா இருக்கட்டும். உங்களோட புது வாழ்க்கைக்கு என்னோட இதயங்கனிந்த வாழ்த்துக்கள்."

"அப்போ பிரேமா கேட்டா?"

"எனக்கு ஒரே ஒரு ப்ராமிஸ் பண்ணுங்க."

"கண்டிப்பா செய்றேன். சொல்லுங்க"

"சார், இது ஒரு சப்ப விஷயம். யாரும் எதுக்கும் வருத்தப்பட வேண்டியதில்லை. நான் வரலேன்னு சொல்லீருங்க.போனோ, லெட்டரோ போடாதீங்க. ஆல் தி பெஸ்ட்! குட்பை!!!" என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு கிளம்பினேன்.

வீட்டிற்க்கு சென்றபோது மீண்டும் அழைப்பிதழ் என் கண்ணில் பட்டது. எங்கோ, எப்பொழுதோ, எவரோ எழுதிய கவிதை மட்டும் என் செவியில் ஒலித்தது..

புதியதாய் பிறந்தேன்
மீண்டும்..
சுதந்திரம் உணர்ந்தேன் 
நாளும்..
கரணம் தப்பிய மரணம்
உணர்ந்து..
புன்முறுவல் பூத்தேன்..
அழைப்பிதழில்
அவளுக்கு மாட்டிய..
மணாளனின்..
பெயர் கண்டு!!!