பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Dec 10, 2013

நெஞ்சில் ஒளிரும் தீ!

அவன் பார் பார்த்து வியந்த
உண்மையின் தீ!
விடுதலைக் காற்றை 
வீட்டினில் விதைத்து..
வார்த்தைகளாய் 
எங்கள் நெஞ்சில் 
அணையாமல் வளர்த்த தீ!

வறுமையிலும் 
எந்நிலைக்கும் மாறாமல்..
பராசக்தியிடம்
தன்னிலை மட்டும் முறையிட்ட 
தன்மானத் தீ!

மடமைக்கும்
மூட மனிதர்க்கும்..
தன் குரோதத்தை..
மீசையில் முறுக்கிய 
ரௌத்திரத் தீ!

பாவைக்கும் 
மழலை பார்வைக்கும்..
புதுமையை ஒளியூட்டிய 
புரட்சித் தீ!!

தண்ணீரை வலைபிடிக்கும் 
கனவில் வெள்ளையன்!
வெந்நீராய் கொதித்தெழுந்த 
கவிதைத் தீ!

கொழுத்தெரிந்தது 
நாட்டில் அடிமைத் தீ!
பாடல்களில் 
பதில் பொசுக்கினான் பாரதி!

அஞ்சினர்
வார்த்தைத் தீ கண்டு!
மிஞ்சினர் 
வழக்குகள் கொண்டு!
எழுதினான் புது சரிதம்..
வெள்ளையனை சரித்தது 
பாஞ்சாலி சபதம்!

அறிவாய்..
அவன் 
திருவாய் மலர்ந்து 
அழகாய் 
கவிபாடிய போதெல்லாம்.. 
அவனை ஒரு புழுவாய்
மூடர் அருவருத்த காலம்!
பொற்றாமரை குளத்தில்
ஒரு தாமரையாய்..
முத்தமிழ்த் தீ!

தமிழன் வாழும்வரை 
நெஞ்சில் ஒளிரும் தீ!
ஒரு வரலாற்று தீ..
எமக்குள்ளே 
வலுத்துக்கொண்டிருக்கும் 
உணர்ச்சித் தீ..
அவனே பாரதி!

2 comments: