பின்வரும் கதையில் நான் கதைக்கவிருப்பது சஞ்சனவை பற்றி. உள்ளூரில் ஒரு சாதாரண பொறியியல் கல்லூரியில் தட்டுதடுமாறி எப்படியோ வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கெடுத்து, இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு மென்பொருள் நிறுவனத்தின் அழைப்பு கடிதத்திற்காக காத்திருக்கும் ஒரு சராசரி பட்டதாரி அவள். மிக அமைதியானவள், என்றாலும், விழிகள் காணும் கனவுகள் ஏராளம். அதற்கு அவள் எடுக்கும் முயற்சிகள் தாராளம். அதிகம் பேசாத அந்த வீட்டுப் பறவைக்கு, கையளவு நண்பர்கூட்டம். அவர்களுக்கும் இவளின் பிறப்பு வளர்ப்பு தெரியாத நட்பு கோலம். வாழ்வின் சில சம்பவங்களில் இவளின் ஆசைகளும் கனவுகளும் கைதாகிபோனது. இதோ அடுத்த சில பக்கங்களில் இவளின் இரு வருட வாழ்க்கை என்ன ஆனது என்று எழுதுகிறேன். ஆர்வலர்கள் இன்னும் கீழே தொடரலாம். ஆர்வமில்லாதவர் எதையோ ஒன்றை தொலைக்க ஆயத்தமாகலாம்!!
சஞ்சனாவிற்கு தூக்கிவாரி போட்டது. சில நொடிகள் பேச்சற்று இருந்தவள், தம்பி ராஜுவிற்கு போன் செய்து உடனே வீட்டிற்கு வர சொன்னாள். ஐந்தே நிமிடங்களில் ராஜு வீட்டில் இருந்தான். அப்பாவை தூக்கி, சென்ற வாரம் வாங்கிய புது காரில் ஏற்றினான். சஞ்சனவை வீட்டிலயே இருக்க சொன்னான். வீட்டின் வாயிலில் நின்றபடியே, ரோட்டிலிருந்து மறையும்வரை அவள் கண்கள் காரையே சூழ்ந்திருந்தது.அம்மாவும் தம்பியும் வரும் வரை அங்கயே காத்திருந்தாள். எல்லாம் நலமாக இருக்கிறது என்பதை கேட்கவே அவள் செவிகள் ஆர்வமாய் இருந்தன. ஆனால், இருவரும் ஒன்றும் பேசாமல் அவளை உள்ளே அழைத்து சென்றனர்.
சஞ்சனாவால் அப்பாவை அடையாளம் காண முடியாத அளவிற்கு மருத்துவ சாதனங்கள் தொண்டையை சுற்றி முற்றுக்கையிட்டுருந்தன. பாதுகாப்பிற்காக ஒரு கண் பஞ்சு துணியால் மூடப்பட்டிருந்தது. இடது கண்ணும் கன்னமும் மட்டுமே தெளிவாய் தெரிந்தது. அதற்கு மேலும் தன் அப்பாவை அந்த கோலத்தில் பார்க்க முடியாத சஞ்சனா ஐ.சி.யு'வை விட்டு வெளிவந்தாள். தம்பியின் கரம் பற்றி, வான் மழை போல் கண்ணீரில் கதறினாள். ராஜு அமைதி காத்தான். ஆனால், அவனின் கண்ணீர் தன் தோள்களில் படர்வதை சஞ்சனா உணர்ந்தாள். முதல் முறையாக இது அவள் எல்லோர் முன்பும் கண்ணீர் வடித்த நாள்.
நாள் 1
ஏப்ரல் மாதத்து வெயிலின், மரங்களுக்கும் பூக்களுக்கும் மத்தியில் தெரிகிறதே, அதுவே அந்த வீடு. வீடு என்று வர்ணிப்பதைவிட சஞ்சனா பிறந்து வளர்ந்த கோவில் அது. அன்று, அப்பாவிற்கு பிடித்த உணவை தயாரிப்பதில் சுறுசுறுப்பாய் இருந்த வேளையில், ஹாலில் அப்பாவின் குரல் கேட்டது
"சஞ்சு, என்னமா பண்ற? கிச்சன்ல இருந்து வாசனை ஆள தூக்குது. என்னமா சமைக்கிற?
"உங்களுக்கு புடிச்ச சன்னா மசால் சப்பாத்தியும், சாதமும் செஞ்சுகிட்டு இருக்கேன்பா.."
"சூப்பர்!! இன்னைகாச்சு நல்ல சாப்பாடு காத்துகிட்டு இருக்கு. வழக்கமா உங்க அம்மா செய்ற சாப்பாட்டுல இருந்து விடுதலை!!"
சஞ்சனா அம்மாவை பார்த்து அடக்கமுடியாமல், வெட்கி சிரித்தாள். அம்மாவும் சஞ்சனாவையும், அவரையும் பார்த்து புன்சிரித்தாள்.
குளியலுக்கு சென்று திரும்பிய அப்பாவின் குரல் தன்னை அழைப்பதை உணர்ந்தாள் சஞ்சனா. அப்பாவின் சோர்ந்த குரல் கேட்டு, பதட்டத்தோடு சமயலறையில் இருந்து வெளிவந்தவளுக்கு, அப்பா கட்டிலில் அமர்ந்திருந்த கோலத்தை கண்டு பேரதிர்ச்சி.
"அப்பா.. என்னாச்சுப்பா??"
"உச்சந்தலை ஒரு மாதிரி குளிருதுமா... என்னோட கால் உணர்ச்சி இல்ல.." என்று முடிப்பதற்குள் இன்னும் சோர்வானது அவர் குரல். இறுதியில் பேச்சில்லை.
சஞ்சனா பயந்த நிலையில் அம்மாவை வெளிவர அலறினாள். அம்மா அப்பாவை கவனித்த நேரம், சஞ்சனா டாக்டருக்கு போன் செய்தாள்.
"டாக்டர், அப்பாவுக்கு திடீர்னு கை கால் அசைக்க முடியல."
"அவரை பேச வைச்சிகிட்டே இரு.. அவரால உன்கிட்ட பேச முடியுதா?"
"இல்லை. பேச மாட்டேங்றார்"
"அவரால காலை தூக்கமுடியுதான்னு பாரு.."
சஞ்சனா அழுதுகொண்டே அப்பாவின் காலை தூக்க முயற்சித்தாள்.ஆனால், அப்பா ஏதோ சொல்ல முயற்சிப்பதை அவர் உதடுகளின் அசைவில் தெரிந்தது. கேட்கவும் இல்லை, புரியவும் இல்லை.
"டாக்டர், அவரால என்கிட்டே பேச முடியல. நான் பேசுறப்ப என் கண்ணையே தான் பாக்குறார்."
"சரி.பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரிக்கு சீக்கிரம் கூட்டிட்டுபோ. அப்பாவுக்கு 'பிரைன் ஸ்ட்ரோக்'ன்னு நினைக்கிறேன்."
நாள் 2
“ராஜு..நானும் உன்கூட ஹாஸ்பிடல் வரவா?"
“வேண்டாம்..அப்பா இன்னும் ஐ.சி.யு'ல தான் இருக்கார்.யாரையும் பார்க்க விடமாட்டேங்கறாங்க.ஒரு மூணு நாள் கழிச்சி பார்க்கலாம்."
ராஜு கிளம்பி சென்றான். சஞ்சனா மூன்று நாட்கள் காத்திருந்தாள், சீக்கிரம் நகர.
நாள் 5
"ராஜு.. இன்னைக்கி நான் கண்டிப்பா வருவேன். சும்மா ஏதாச்சும் காரணம் சொல்லாதே."
"சரிம்மா.. நான் கூட்டிட்டு போறேன்."
ராஜு,சஞ்சனா மற்றும் அம்மா மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்பா இன்னும் ஐ.சி.யு'வில் தான் இருந்தார். ஆனாலும், எப்படியோ உள்ளே சென்று பார்ப்தற்கு அனுமதி பெற்றனர்.
ஐ.சி.யு'வில் சஞ்சனா தனக்கு பரிச்சியமான அந்த முகத்தை தேடினாள். அவளின் தந்தை முகம் அது. அவளால் கண்டுகொள்ள முடியவில்லை, அந்த மயான அமைதி நிலவிய அறையில். அருகிலிருந்த நர்சிடம் தன் தந்தை பெயர் கேட்டு வினவினாள். நர்ஸ் சஞ்சனா நின்றதற்கு பின்புறம் இருந்த கட்டிலை காட்டினாள்.
நாள் 6
அன்று அந்த புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனம் சஞ்சனா வேலையில் சேர்வதற்கான நாள் குறித்து சேர்க்கை கடிதம் அனுப்பியிருந்தது. அதில் மே 26 ஆம் தேதி குறிப்பிடபட்டிருந்தது. ஒரிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் இரண்டு மாதங்களுக்கான பயிற்சிக்கு சஞ்சனா புறப்பட வேண்டும். மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படியாவது மறைத்துவிடலாம் என்று எண்ணியிருந்த தருணத்தில், ராஜு தகவலறிந்து அவளை கட்டாயபடுத்தி புறப்பட ஏற்பாடுகளை செய்தான்.
"வாழ்க்கை யாருக்காகவும் காத்திருக்காது, நீ போய்கிட்டே இருக்கா..." என்றான்.
அவனின் இந்த அணுகுமுறைக்கு இன்னொரு காரணம், சஞ்சனா இந்த சூழலில் விடுபடுவாள். வாழ்க்கையை நோக்கி நகருவாள் என்று எண்ணினான். நாட்கள் கரைந்தோடின.ஆனால், அப்பாவின் உடல்நலத்தில் எந்த மாற்றமும் இல்லை. சஞ்சனாவும் பயிற்சிக்கு சென்றாக வேண்டும்.
மே 22
டாக்டர் சஞ்சனாவையும் ராஜுவையும் அழைத்தார். வளர்ந்த பிள்ளைகள், மனநிலை முதிர்ந்திருக்கும் என்றெண்ணி பேச்சை தொடர்ந்தார்..
"சஞ்சனா.. ராஜு..உங்களுக்கு புரியும்னு நெனச்சு சொல்றேன்.. என்னதான் அப்பா ஸ்ட்ரோக்'ல இருந்து மீண்டுட்டாலும், அவருக்கு இன்னமும் மூச்சு திணறல் இருக்கு. நுரையீரல் வீக்கானதனால மூச்சுவிட ரொம்ப கஷ்டபடறார். அவரை இன்னும் ஒரு நல்ல பெரிய ஹாஸ்பிடலுக்கு மாற்றனும்"
அப்பா புதிய ஹாஸ்பிடலுக்கு மாற்றப்பட்டார். உடன் அம்மாவும் இருந்தாள். சஞ்சனா உள்ளே நுழைந்தால். ரயிலுக்கு செல்ல இன்னும் மூன்று மணி நேரமே இருந்தது. அம்மாவை இறுக கட்டிக்கொண்டாள். தைரியத்தை கைவிட வேண்டாம் என்றாள். அப்பா வேலைக்கு செல்லும் முன்பு ஒவ்வொரு முறையும் நெற்றியில் முத்தமிடுவது போல், இப்பொழுதும் அதை இதழ்மொழிந்தால். பாதம் தொட்டு வணங்கிவிட்டு, யாரும் காணாத நேரம், அவர் காதில் அவள் கனாகண்ட நிறுவனத்தில் பணிக்கு சேர்வதை மெல்ல சொன்னாள்.
அந்த ஊரில் இருந்த மிகப்பெரிய மருத்துவமனையை அவர் சுட்டிக்காட்டினார்.
"என்ன? சமாளிச்சிருவீங்களா??"
"கண்டிப்பா டாக்டர். எங்களுக்கு எங்க அப்பா வேணும்." என்றான் ராஜு.
"அப்போ சரி. மாத்துறதுக்கான ஏற்பாடுகளை நாம செஞ்சுடலாம்."
"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்"
இருவரும் அறையை விட்டு வெளிவந்தனர்.ராஜுவிற்கு இன்னமும் சந்தேகம்,தன்னால் பிரச்சனையை சமாளிக்க முடியுமா என்று. இதற்கிடையில், சஞ்சனா தன் பயணத்தை ரத்து செய்ய அவனிடம் ஆலோசித்தாள். ராஜு மறுத்துவிட்டான்.
மே 24
அப்பா புதிய ஹாஸ்பிடலுக்கு மாற்றப்பட்டார். உடன் அம்மாவும் இருந்தாள். சஞ்சனா உள்ளே நுழைந்தால். ரயிலுக்கு செல்ல இன்னும் மூன்று மணி நேரமே இருந்தது. அம்மாவை இறுக கட்டிக்கொண்டாள். தைரியத்தை கைவிட வேண்டாம் என்றாள். அப்பா வேலைக்கு செல்லும் முன்பு ஒவ்வொரு முறையும் நெற்றியில் முத்தமிடுவது போல், இப்பொழுதும் அதை இதழ்மொழிந்தால். பாதம் தொட்டு வணங்கிவிட்டு, யாரும் காணாத நேரம், அவர் காதில் அவள் கனாகண்ட நிறுவனத்தில் பணிக்கு சேர்வதை மெல்ல சொன்னாள்.
அங்கிருந்து இருபதே நிமிடங்களில் ரயில் நிலையத்திற்கு சென்றுவிட்டாள். வழக்கத்திற்கு மாறாக, அன்று அவளுக்கான ரயில் நடைபாதையில் அவள் வரும் முன்னே காத்திருந்தது.
மே 25 மாலை,
கோயில்களின் மாநகரமான, புவனேஸ்வர் சென்றடைந்தாள் சஞ்சனா. சிறிய ஊராக இருந்தாலும் அவளின் எண்ணம் போல் ஊர் மிக அழகாக இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து விடுதிக்கு செல்லும் வழியின் ஒவ்வொரு சுவரும் அந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலித்தன.
புன்னகையை மட்டும் பதிலளித்துவிட்டு, மீண்டும் அமைதி நிலைக்கு திரும்பினால் சஞ்சனா. கதிர் அவள் பெயர் கேட்கும் முன்னரே, அவள் தன்னை அறிமுகம் செய்யும் வாய்ப்பு வந்தது. சுயஅறிமுகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் பெயர், ஊர், படிப்பு, பொழுதுபோக்கோடு சேர்த்து ஏதாவது ஒன்று செய்து காட்ட வேண்டும். சஞ்சனா அனைத்தையும் முடித்திருந்த பொது அவளுக்கு ஒரு பாடல் பாட எழுதபட்டிருந்தது. மனமில்லை, என்றாலும், அனைவரையும் ஆச்சர்யப்படுதும்படி, மழலைகளின் பாடல் ஒன்றான "ஜானி ஜானி எஸ் பாப்பா" பாடினாள். அவள் பாடி முடித்து தான் தாமதம். வகுப்பே விழுந்து விழுந்து சிரித்தது. அனைவரும் அவளின் நகைச்சுவை உணர்வினை பாராட்டினர்.சஞ்சனாவிற்கு பின் கதிர் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். அவன் ஒரு எம்.சி.ஏ பட்டதாரி என்று தெரிந்துகொண்டாள்.
அன்றிரவு, சிற்றுண்டி விடுதியில் கையில் தட்டேந்தி நின்றிருந்தவளுக்கு, மனதில் அப்பாவின் ஞாபகங்கள் மட்டும் ஓடிக்கொண்டிருக்க, திடீரென ஒரு பேச்சுக்குரல் கேட்டது.
"டேய் மச்சி!! சூப்பர் பிகர்!!"
"டேய்.. இதெல்லாம் சூப்பர் பிகராடா? அந்த பொண்ண பாரு!"
வாலிப வாலு மனங்கள் பெண் பறவைகள் கூட்டத்தை ஆரம்பித்திருந்தனர். தன்னை தான் கேலி செய்கின்றனர் என்பதை கூட அவள் மனம் உணரவில்லை. அவர்கள் யாரென்று நோட்டமிட்டவள், வழக்கம் போல அமைதியாய் விடுதிக்கு திரும்பினாள்.
மே 26
பயிற்சியின் முதல் நாளான அன்று, சஞ்சனா சரியான நேரத்தில் சென்றடைந்தாள். அனைவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்ய ஆரம்பித்தனர். திடீரென்று அவன் அனுமதி கேட்டு உள்ளே வந்தான். வந்தவன் அவளருகிலயே அமர்ந்து கொண்டான். அவன் சஞ்சனாவை அடையாளம் கண்டுவிட்டான். அவளும் கூட, ஏனெனில் வந்தவன் நேற்றிரவு கேலி செய்தவரில் இரண்டாமவன். மிகவும் தயக்கத்தோடு தன்னை அறிமுகம் செய்துகொண்டான் சஞ்சனாவிடம்.
"என் பேரு கதிர். சென்னையில இருந்து வரேன்."
நாட்கள் கடந்தன.சஞ்சனாவும் கதிரும் நல்ல நண்பர்களாயினர். பயிற்சியில் உடனிருந்தவர்களில் கதிரிடம் மட்டுமே தன் அப்பாவின் நிலையை எடுத்துரைத்தாள். ஒரு நாள் பயிற்சிகூடத்தில் அழுதேவிட்டாள். அன்றிலிருந்து கதிர், அவளை நன்கு கவனித்து, பயிற்சிகளில் உதவிகள் செய்து, அவளுடனே இருந்தான்,ஆபத்தில் உதவும் ஒரு நண்பனாய்! சஞ்சனாவும், நட்புக்கு ஒரு மனிதனின் அறிமுகம் பல வருடங்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதை உணர்ந்தாள்.
ஜூன் 9 இரவு 1030 மணி
ராஜுவிடம் இருந்து அழைப்பு வந்தது. ராஜுவின் குரல் மட்டுமே கேட்டது. அதன் பிறகு எதிர்முனையில் நிசப்தம். அவளுக்கு தூக்க கலக்கமில்லை, ஆனால், அடுத்த நாள் தேர்விற்கு தயாராக வேண்டியிருந்தது.
"சஞ்சனா, அப்பாவுக்கு ரொம்ப முடியல. கொஞ்சம் சீரியஸ். நீ உடனே பிளைட் பிடிச்சு கிளம்பி வா"
"ஏன்? திடீர்னு என்ன ஆச்சு? நேத்திக்கி கூட நல்லா இருந்தாருன்னு சொன்ன?"
"ஆமாம், ஆனா இப்போ கொஞ்சம் சீரியஸ். உன்னோட யாராச்சு இருந்தா அவங்ககிட்ட கொடு. டிக்கெட் போடுறதுக்கு அவங்ககிட்ட பேசிக்கிறேன்."
"சரி. இரு தரேன்."
சஞ்சனாவின் அறைத்தோழி ராஜுவிடம் பேசிவிட்டு திகிலடைந்தாள். உடனே, கல்லூரி முதல் தன்னுடனே படித்து வந்த கதிரை அழைத்தாள். பெண்கள் மட்டும் தங்கியிருந்த அந்த விடுதிக்குள் கதிரை விட மறுத்த காவலாளி பின்னர், சஞ்சனாவை நோக்கி கைகட்டி ஏதோ சொல்ல, நிலைமையை உணர்ந்த காவலாளி, கதிரை உள்ளே அனுமதித்தார். விரைந்து சென்றவன், சஞ்சனாவின் டெபிட் கார்டு விபரங்களை கேட்டதும், அவள் பதட்டமடைந்தாள். ஆயினும், அனைத்து தகவல்களையும் அளித்துவிட்டாள்.
பல சிரமங்களுக்கு மத்தியில், கதிர், விமானத்துறையில் பணிபுரியும் தன் மாமன் மகனின் உதவியுடன் ஒரு டிக்கெட் எடுத்துவிட்டான். மணி ஏற்கனவே ஐந்து ஆயிற்று. அன்றைய தினமே தேர்வும் இருந்தது. சஞ்சனாவிடம் டிக்கெட்டை தந்துவிட்டு கதிர் விடுதிக்கு பறந்த பொது மணி 530
ஜூன் 10 காலை 7 மணி
பிளைட் 830 மணிக்கும், தேர்வு 9 மணிக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. சஞ்சனா தன் உடமைகளை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாப் நோக்கி சென்று கொண்டிருந்தாள். திடீரென்று கதிரின் முகம் தென்பட்டது.
அவனிடம் விரைந்து சென்று கேட்டாள்," இன்னும் இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க கதிர்?"
"முதல்ல ஒரு ஆட்டோ பிடிப்போம். ஏர்போர்ட் இங்கிருந்து ஒரு மணி நேரம்."
ஆட்டோவில் ஏறி இருவரும் ஏர்போர்ட்டை நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழியில் இருவரும் மௌனம் சாதித்தனர். முதன்முதலாக சஞ்சனா பேசினாள்.
" ஒன்பது மணிக்கு எக்ஸாம். நீ இப்போ இங்கே என்கூட என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? நீ முதல்ல கிளம்பு கதிர். நான் பாத்துக்குறேன்."
"இல்ல வேணாம்"
டிரைவரிடம் வண்டியை நிறுத்த சொன்னாள்.
"சஞ்சனா, இது ஒரே ஒரு எக்ஸாம் கிடையாது, ட்ரைனிங் முடிக்கிறதுக்கு. இது எழுதலேனாலும் நான் பாஸ் பண்ணிருவேன்.நீ கவலைபடாதே. நீ திரும்பி வரும்போது இன்னும் தைரியமா வரணும்."
"அப்பா சீரியஸா இருக்கார்னு தெரியும். ஆனால், சரியாயிடுவார்ன்னு நம்புறேன்.நான் அவரை பார்த்துட்டு சீக்கிரம் வந்துறேன்."
கதிர் ஒன்றும் பேசவில்லை.
"எனக்கு இதுதான் பிளைட்ல முதல் தடவை. கொஞ்சம் பதட்டமா இருக்கு."
ஒருவழியாக, ஏர்போர்ட்டை சென்றடைந்தனர் இருவரும். நன்றி சொல்லகூட நேரமில்லாமல் சஞ்சனா புறப்பட்டு சென்றுவிட்டாள்.
ஜூன் 10 மதியம் 2 மணி
சஞ்சனா ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் ஒரு புதுக்குரல் அவளை அடையாளம் கேட்டது. அவன் ராஜுவின் நண்பன், ஸ்ரீகாந்த்.
"அக்கா, நான் ராஜுவோட பிரெண்டு. வாங்க போகலாம். ஏற்கனவே லேட் ஆயிடுச்சு."
"நான் உன்னைய பார்த்ததே இல்ல, எப்படி உன்னைய நம்புறது?"
"போன் பண்ணி ராஜூகிட்ட பேசுங்க."
சஞ்சனா ராஜுவிற்கு போன் செய்தால். ராஜு அவசர வேலை ஒன்றில் உள்ளதால் ஸ்ரீகாந்தை அனுப்பியதாக சொன்னான். இருவரும் உடனே அங்கிருந்து புறப்பட்டனர்.
போகும் வழியில், "எங்கேப்பா போறே? இதுவா வழி?" என்று சஞ்சனா கேட்டாள்.
"நான் வந்த வழி டிராபிக். இது தான் நமக்கு இப்போ பக்கம்" என்றான்.
இவர்கள் சென்ற பாதை முழுதும் மலர்கள் மற்றும் வெடித்து சிதறிய பட்டாசு காகிதங்கள் மட்டுமே அணிவகுத்தன. இறுதியாக சஞ்சனா இறங்கியது மின்சார மயானத்தில்! வாயடைத்து நின்றிருந்தாள். சில வினாடிகள் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஸ்ரீகாந்தின் கண்களையே அவள் உற்று பார்த்தாள், தெரியாத முகமாயினும். அதே நேரத்தில், தன்னை இருகரம் பற்றி அணைத்தது. அவன், ராஜு, தலைமுடி மழிக்கப்பட்ட கோலத்தில்!
அவன், சஞ்சனாவை அப்பாவிடம் அழைத்து சென்றான். அப்பா படுக்க வைக்கப்படிருந்தார், பேச்சின்றி, மூச்சுமின்றி!! அவர் மடிந்தே போய்விட்டார்.சஞ்சனா கீழ் விழுந்தாள்.மயக்கம் அடைந்தாள். தெளிந்து எழுந்தபோது, அருகில் அப்பா தெரிந்தார். மனம் விட்டு அவளால் அழ மட்டுமே முடிந்தது.நெற்றியில் முத்தமிட்டாள். நேரமானதால், சஞ்சனாவை விலக்கிவிட்டு அப்பாவை தூக்கி சென்றனர். தன் கண் முன்னே இந்த இருபத்திநான்கு வருடங்களாக உடன் வாழ்ந்த ஒரு உயிர் சாம்பலாவதை உயிரற்ற சிலையாய் நின்று கண்டிருந்தாள். முடிந்தது. வாழ்க்கை என்பது இவ்வளவுதான்!
வீட்டை அடையும் வரை அவள் அமைதியாகவே இருந்தால், வழக்கம் போல. வீட்டை அடைந்ததும், அம்மாவின் முகத்தை அவளால் காணமுடியவில்லை. அம்மாவிற்கும் அப்படியே. ஒரு வார்த்தை பேசவில்லை சஞ்சனா. இரவு அம்மா அழுதுகொண்டிருந்தாள் என தெரிந்தும், கண்களை இறுக மூடி, தூங்குவது போல் நடித்து,அவளருகே படுத்துக்கொண்டாள். அந்த நிலைமையை சமாளிக்க முடியாத கோழை அவள். அம்மாவிற்கு ஆறுதல் சொல்லும் தைரியம் இல்லை சஞ்சனாவிடம்.
ஜூன் 11 காலை 8 மணி
சஞ்சனா பயிற்சிக்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டாள். ஒன்று, அப்பாவின் மரணத்தில் இருந்து விடுபட்டு, வாழ்க்கையில் அவள் கவனம் செழுத்த வேண்டும். இரண்டாவது, கடன். அவளின் அன்றைய மாத வருமானம் வீட்டிற்கு பேருதவியாக இருந்தது. சஞ்சனா மீண்டும் பயிற்சிக்கு சென்றாள். ஆனால், கதிரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. எப்பொழுதும் தனியாகவே இருந்தாள். ஆனால், கதிர் எப்பொழுதும் அவளுடன் இருந்தவாறு பார்த்துக்கொண்டான். அவளால் அங்கே கவனம் செலுத்த முடியவில்லை. நிர்வாகமும் அவளின் நிலையறிந்து, அவளை தேர்ச்சி பெற செய்தது. பயிற்சி முடிந்ததும், சஞ்சனாவிற்கு பெங்களூரிலும், கதிருக்கு சென்னையிலும் பணி நியமித்தனர்.
ஜூன் 20 மாலை மணி 7
சஞ்சனாவின் விடுதியின் முன்பு கதிர் விடைபெற காத்திருந்தான்.
" சஞ்சனா, நான் நாளைக்கு காலைல சீக்கிரமே கிளம்பிருவேன். திரும்பி உன்னைய பார்ப்பேன்னு எனக்கு தோணலை.நல்லபடியா எல்லாத்தையும் பாத்துக்கோ.தைரியமா இரு. நீ சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. உங்கிட்ட அதுக்கான திறமையும் இருக்கு."
"தேங்க்ஸ் கதிர். கண்டிப்பா உன்னைய நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்."
"நான் இருக்கேன். உனக்கு எப்போ ஹெல்ப் வேணுமோ, கூப்பிடு. நான் வரேன். பை!!"
ஏழு மாதங்களுக்கு பிறகு..
இந்த இடைவெளியில், சஞ்சனாவும் கதிரும், போன் மூலமாகவோ, அல்லது வலைத்தளம் மூலமாகக்கூட பேசியதில்லை. சஞ்சனா அவன் எண்ணை போனிலிருந்து அழித்துவிட்டாள், மறந்தும் கதிரை அழைத்துவிடக்கூடாது என்பதற்காக. ஆனால், என்ன செய்ய? அவனது எண் அவள் மனதில் அவனை போல பதிந்தே விட்டது.
இறுதியாக ஒரு நாள் பேசிவிடுவது என்று தீர்மானித்தாள். தன் அகம்பாவத்தை தூக்கி எறிந்துவிட்டு, அலுவகத்தில் இருந்து, வீட்டிற்கு செல்லும் வழியில் அழைத்தாள்.
"ஹலோ?"
"ஹலோ"
"சஞ்சனா!!! எப்படி இருக்கே? எங்கே இருந்த இவ்வளவு நாள்? ஏன் ஒரு போன் கூட பண்ணலை?"
"உனக்கு தான் எல்லா கேள்விக்கும் பதில் தெரியும். நானும் அதே கேள்வியை திரும்ப கேட்கட்டுமா?எப்படி ஓடுது வாழ்க்கை?"
" சஞ்சனா எனக்கு நிச்சயம் ஆயிடுச்சி.எல்லாமே திடீர்னு நடந்துருச்சு. பத்திரிக்கையெல்லாம் கூட கொடுத்தாச்சு.அப்பாகிட்டே இன்னொரு ரெண்டு வருஷம் தள்ளி வச்சிக்கலாம்னு எவ்வளவோ சொன்னேன். ஆனால், உடம்பு பிரச்சனைய காரணமா வைச்சு, என்னைய ஒத்துக்க வைச்சுட்டாங்க. ஆனா, சஞ்சனா..."
"போதும் கதிர். நிறுத்து.ஹ்ம்ம். ஆல் தி பெஸ்ட். கல்யாணத்துக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். மறக்காம பத்திரிக்கைய அனுப்பு."
ஆனா, சஞ்சனா..."
போதும் கதிர். இதுக்கு மேல நீ எதுவும் சொல்ல வேண்டாம்,நானும் எதுவும் கேட்க விரும்பலை. உன்னோட பத்திரிகையை எதிர்பார்த்து காத்துகிட்டு இருப்பேன், உன்னோட ஜோடியையும் தான்." என்றவாறே போன் இணைப்பை துண்டித்தாள். அமைதி ஆனாள். அந்த அமைதி அவள் அப்பாவை மயானத்தில் கரைத்துவிட்டு வீட்டுக்கு வந்ததற்கு இணையாய் இருந்தது. ஆம், அவளின் முதல் காதல் தொடங்கும் முன்பே முடிந்து விட்டது.
அவள் இன்னும் அமைதியானாள். எந்த ஒரு யோசனைக்கும் இடம் தரவில்லை. சில நாட்களாய், மிகவும் பணிந்தே இருந்தாள். கதிர் திருமணத்திற்கு சென்றாள். நாட்களும் நகர்ந்தன. அவள் மாற முயற்சித்தாள். வேலை பளுவோடு மேலும் சில நல்ல காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்.சில நிமிடங்கள் கூட தனிமையில் இல்லாதவாறு பார்த்துகொண்டாள். எப்பொழுதும் நண்பர்கள் சூழ நேரம் கழிவதை உறுதி செய்தாள். ஆனால், முகத்தில் போலி புன்னகை ஒன்றே மிஞ்சியது.
நாட்கள் செல்ல செல்ல அந்த போலி புன்னகையே நிஜமானது. வாழ்க்கை அவளுக்கு கற்றுகொடுத்த பாடம் "காலம் எந்த காயத்திற்கும் மருந்தளிக்கும்" எதையும், எல்லாவற்றையும் மறக்கலாம், மன்னிக்கலாம். இந்த ஒரு காட்சியோடு, தன் வாழ்க்கையை, சஞ்சனா வாழத் துவங்கினாள்.
இன்று சஞ்சனாவிற்கு வயது 26.. நல்ல நண்பர் கூட்டம் உண்டு. அதில் கதிரும் ஒருவன். அவள் மனதிலே எப்பொழுதும் எழுந்த ஒரே கேள்வி, கதிர் ஏன் தன் வாழ்வில் வந்தான் என்பதே. அதற்கும் இப்பொழுது விடை கிடைத்தாயிற்று. கதிர், கஷ்ட காலங்களை கடந்து செல்ல இறைவன் அனுப்பி வைத்த ஒரு நல்வழிகாட்டி. மேலும் உறுதியாக, தன் தந்தையை கடைசியாய் காண செய்த ஆன்மாவும் அவனே!
வாழ்க்கை ஒரு வானவில்.. சிறிது.. ஆனால், அதன் வர்ணங்கள் மிக அழகு!!!

No comments:
Post a Comment