Dec 30, 2011
Dec 28, 2011
Nov 29, 2011
தலை வீழ்வதிலும் உண்டு...வீரம்!!!
வணக்கம்!! சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த மாமன்னர்கள், தலைவர்கள் மற்றும் பலரை சரித்திரம், எழுதப்பட்ட காரணத்தினால், நம் கண்களுக்கும், செவிகளுக்கும், புத்தகங்கள் மூலமாக, நாடகங்கள் மூலமாக, நம் மனதில் பதிந்துருக்கின்றன இன்றும்!! இதோ, இங்கே நாம் காணவிருப்பது வரலாற்றில் எழுதப்படாதவை. ஏனெனில், யார் செவிகளிலும் சொல்லப்படாதவை. வெள்ளையனிடம் முதன்முதலாய் சிக்கிதவித்த ஒரு தென்னிந்திய மன்னன் கங்கைகொண்டானின் கதையை இங்கு விவரிக்கின்றேன்!!!
காட்சி ஒன்று
காலம் – 1857, ஆங்கிலேயர் நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலம்..
இடம் - கங்கைகொண்டசோழபுரம்
நேரம் - ஒரு இராகுகாலம்
மார்க்ஸ் :: ம்ம்!! இழுத்து வாருங்கள் அவனை. சிறையில் அடைத்து சிரச்சேதம் செய்யும்முன் அவனை உயிர் துறக்கச் செய்யாமல் சித்ரவதை செய்யுங்கள்! நம்மிடம் கலகம் செய்ய நினைக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இவன் பிணம் ஒரு பாடமாக அமையும்!
கங்கைகொண்டான் :: அடேய் மார்க்ஸ்!!! நான் சொல்லும் பாடம் கேள்! உங்களால் எங்களை அடிமைப்படுத்த மட்டுமே முடியுமே தவிர, அழிக்க இயலாதடா!!! நீ ஏற்ப்படுத்தும் காயத்தைவிட கொடூரமானது, என்னினத்தை சேர்ந்தவர்களே என்னை துரோகித்தது. என் அருகிலேயே உறவாடி, நம்பி, துரோகித பிறகுதான் என்னை உன்னிடம் சமர்ப்பித்துள்ளனர், அந்த கோழைகள்!! உனக்கும் அதேபோல் ஒரு வேளை வரும். தைரியமிருந்தால் என் கரவிலங்குகளை விடுவித்து என் வாளுக்கு பதில் சொல்லடா!!!
மார்க்ஸ் :: போதும் நிறுத்து!! வெறும் வாய்ச்சொல் வீரர்களடா நீங்கள்!! காவலர்களே.. இவனை சிறையில் அடையுங்கள்!! தண்டனை நிறைவேறும்முன் இவனிடம் சிறையில் நன்கு வேலை வாங்குங்கள்!!
காவலன் :: உத்தரவு அய்யா!!!
கங்கைகொண்டான் :: அடேய் மார்க்ஸ்!!! என்னை இக்கணமே கொன்றுவிடு! தப்பித்து மீண்டும் வந்து, என்னுயிர் மிஞ்சியிருந்தால், உங்களில் ஒருவன்கூட மிஞ்சமாட்டீர்!! நாங்கள் வாய்ச்சொல்லில் மட்டும்மல்ல.. வாள்சொல்லிலும் வீரர்களடா!!!
மார்க்ஸ் :: இழுத்துச் செல்லுங்கள் அந்த மூடனை!!!
காட்சி இரண்டு - சிறைச்சாலையில்..
அதிகாரி :: உன் பெயர் என்ன?
மன்னன் :: கங்கைகொண்டான்.
அதிகாரி :: வயது?
மன்னன் :: முப்பதிரண்டு.
அதிகாரி :: உனக்கு இங்கு தண்டனை நிறைவேற்றப்படும்வரை இங்கு விறகு வெட்டும் பணிபுரிய வேண்டும்.
மன்னன் :: (மனதிலே)
தம்பிக்கு தண்டனை..
சொந்தங்களுக்கு சிரச்சேதம்..
அழிக்கப்பட்ட அரண்மனை...
இடிப்பட்ட இல்லங்கள்..
அடிபட்ட உள்ளங்கள்..
சிதறிக்கிடக்கும் என் குலமக்கள்!!
நான் இன்னும் உயிர் வாழவேண்டும். காரணம், சுதந்திர வேட்கை.இந்த சிறைச்சாலையை தகர்த்தெறிந்து மன்னன் வேங்கைவேந்தனோடு படையெடுத்து மீண்டும் இவர்களை விரட்டியடிக்க என் உயிர் இன்றியமையாதது.
சுதந்திர நிலவிற்காக ஏங்கிடும் வானம் நான்..
எனக்கு உறக்கம் என்பது கிடையாது..
உறக்கம் என்பது வந்துவிட்டால்...
விடியலே எனக்கு இருக்காது!!!
அதிகாரி :: ம்ம்.. கற்பனை காணாதே!! செல்..செல்.. பொழுது சாயும்முன் விறகுகளை வெட்டு!
மன்னன் :: (மனதிலே) மரத்தினை மட்டுமல்ல கோழைகளே!!! வெகுவிரைவில் உங்கள் தலைகளையும் வெட்டிவீழ்த்துவேன்!!!
காட்சி மூன்று
இடம் - காயல்பட்டிணம், கங்கைகொண்டசோழபுரம் அருகில்..
காலம் - அதே நாள்.. மாலைப்பொழுது!
நண்பன் 1: பாண்டி!! அண்டை தேசத்து மன்னன் கங்கைகொண்டான் வெள்ளையனிடம் பிடிபட்டார்!!!
பாண்டித்துரை :: அன்பர்களே! சூழ்ச்சியால் வெல்பவர் வெகுவிரைவில் வீழ்ச்சி காண்பர்.வெள்ளையனை எதிர்க்க என் பங்கும் என்றும் உண்டு. விழுந்தாலும் விழுதாவேன், எழுந்தாலும் கடலைலையாவேன்!!! ஒரு இளவழகனை பறிகொடுத்தோம்.படைத்தளபதிகளையும் பலிகொடுத்தோம்.எஞ்சியிருப்பது ஒரு கங்கைகொண்டான் மட்டுமே!!
நண்பன் 2: அந்த குள்ளநரிகளை எதிர்த்து போராட எவனுக்கும் இங்கு துணிச்சலில்லை!
நண்பன் 3:: ஆம்! அந்த மன்னரையும் தவறவிட்டால், நம் பூமி வெள்ளைக்காரபுரியாக மாறிவிடும்.
பாண்டித்துரை :: மன்னர் தப்பிக்கவேண்டும். அவர் ஏற்கனவே இருமுறை தப்பியவர்.
நண்பன் 4: அதனால்தான் இந்தமுறை காவல் கெடுபிடி அதிகம் உள்ளதாம்!
பாண்டித்துரை : இந்தமுறை இந்த பாண்டித்துரை தப்பிவிப்பான்!
நண்பர்கள் : எப்படி? எப்படி முடியும் உன் ஒருவனால்? பலத்த பாதுகாப்பையும் மீறி நீ எப்படி மீட்பாய் மன்னரை?
பாண்டித்துரை : தோழர்களே!! இது ஒரு தனியொரு மனிதனால் இயலாத காரியம். இமயமான காரியம். இது நம் கூட்டுமுயற்சியால் மட்டுமே முடியும். நானே இதற்கு முழு பொறுப்பேற்கிறேன். நம்மில் உயிர்மூச்சுள்ளவரை மன்னர் கங்கைகொண்டான் பாதுகாப்பாக இருப்பார். ஒற்றன் ஒருவனிடம் நான் அறிந்த சேதி. அங்கே சில வெள்ளைக்கார விசுவாசிகள் சிறைக்குள் விறகெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது ஒன்றே நமக்கிருக்கும் ஒரே ஆயுதம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு எப்படியாவது நாம் நால்வரும் சிறைக்குள் படையெடுத்து ஆங்கிலேயரிடம் பரிச்சியம் ஆகவேண்டும். பிறகு மன்னரை காப்பாற்றியாகவேண்டும்.
நண்பன் 1: ஆனால், அதற்கு பல மாதங்கள் ஆகுமே?
நண்பன் 2: அதற்குள் மன்னரின் தண்டனை நிறைவேற்றப்பட்டால்?
பாண்டித்துரை : கவலை வேண்டாம் நண்பர்களே!! நடந்து முடிந்த போரில் ஏற்பட்ட காயத்திலிருந்து மன்னர் மீளாமல் தண்டனை நிறைவேற்றப்படமாட்டது. பல மாதகாலங்கள் ஆகும். அதுவே நமக்கிருக்கும் கால அவகாசம். எனவே இன்றிரவே நாம் கங்கைகொண்டசோழபுரம் செல்வோம். அனைவரும் தயாராகுங்கள்!
காட்சி நான்கு - கங்கைகொண்டசோழபுர சிறைச்சாலையில் ஒரு நாள்...
கங்கைகொண்டான் : (மனதிலே) மன்னன் வேங்கைவேந்தனோடு சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்து படையெடுப்பு!!! ஒருவேளை வெள்ளையன் ஊற்றும் இந்த வெட்ககேடுகேட்ட கூழுக்கு இனியும் முழமிட்டு விறகுவெட்டாது எனது கரங்கள்.இன்றே இங்கிருந்து பிணமாகவாது வெளியேறிவிடவேண்டும்.
விழுதினை வீசி, தன் உயிரை விழுதில் பிடித்துக்கொண்டு விறுவிறுவென ஏறினான். சுவர் பிரம்மாண்டமாய் நின்றது. கீழே குதிப்பதா?? வேண்டாமா?
அபாய சங்கு ஒலிக்க, ஆங்கிலேயர் படை சூழ, ஜெனரல் மார்க்ஸ் கத்தினான்...
"கங்கைகொண்டானை
சுட்டுவிடுங்கள்..
சுட்டுவீழ்த்துங்கள்!!!"
குண்டுகள் சீற, கீழே விழுந்தான் மன்னன்!!
காட்சி ஐந்து - கங்கைகொண்டான்சோழபுரம் காளி கோவிலில்..
பாண்டிதுரை : (மனதிலே) வெள்ளையனை எதிர்த்து வெளியேற்ற, கோழை வேங்கைகளை வேட்டையாட மாமன்னர் கங்கைகொண்டனை, வேங்கைவேந்தனிடம் ஒப்படைக்க, என்னுயிரையும் தருவேன் காளியே!!! நிச்சயம் மன்னரை தப்பிவிப்பான் இந்த பாண்டித்துரை!! இது சத்தியம்.. நம் பாரத மண் மீது சத்தியம்!
நண்பர்களே!! நம் திட்டப்படி சிறைப்பகுதியை சுற்றி விறகு வெட்டதொடங்கி, அசல் விறகுவெட்டிகளாய் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும். பிறகு காவலர்களிடம் நன்கு பழகி சில மாதங்களில் சிநேகிதத்தையும் சிறைபிடிக்கவேண்டும். பிறகு சிறைக்குள் தேக்கு, ஜாதி மரம் வெட்ட அனுமதி கேட்போம்!
நண்பர்கள் : ஆம் பாண்டி! ஆறு மாத காலம் கழித்து நாம் மீண்டும் இங்கே இணைவோம்!
இவர்கள் திட்டமிட்டபடியே விறகுவெட்டிகளாய் வாழ்ந்து காவலர்களின் நன்மதிப்பை பெற்று, பிறகு ஐவரும் இனைந்து சிறைக்குள் மரம் வெட்ட ஜெனரல் மார்க்ஸை அணுகினர்.
காட்சி ஆறு
மார்க்ஸ் : காவலனே.. யார் இவர்கள்?
காவலன் : அய்யா.. இவர்கள் நம் சிறைப்பகுதியை சுற்றி விறகுவெட்டி பஞ்சம் பிழைப்பவர்கள்.
மார்க்ஸ் : அது சரி.இந்த ஆசாமிகளை என்னிடம் அழைத்து வந்த நோக்கம்?
பாண்டித்துரை : அய்யா.. நம் சிறைக்குள் இருக்கும் தேக்கு, ஜாதிமரங்கள் ஆகியவற்றை வெட்ட தாங்கள் அனுமதிக்கவேண்டும்.
மார்க்ஸ் : நீ நிறுத்து! காவலனே, இந்த பரதேசிகளை, எப்படி நான் நம்புவது?இவர்களுக்கு உயிர் மேல் ஆசையிருந்தால் நான் கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் இங்கிருந்து மறையசொல்!
காவலன் : இல்லை அய்யா! இவர்கள் நம் காவலாளிகள் அனைவருக்குமே பரிச்சயமானவர்கள்.தவறேதும் நிகழாது. நம் நம்பிக்கைக்குரியவர்கள்.
மார்க்ஸ் : அப்படியென்றால் சரி, ஆனால், சில நிபந்தனைகள்!!
1) உள்ளே செல்ல நால்வருக்கு மட்டுமே அனுமதி.
2) வெட்டும் விலையான மரத்தில் பாதி ஆங்கிலேயருக்கு.
3) பொழுது இருட்டும்முன் புறப்பட்டுவிட வேண்டும்.
4) குறிப்பாக, கைதிகள் விறகுவெட்டும் பகுதிக்கு கண்டிப்பாக செல்லக்கூடாது!!!
பாண்டித்துரை : சரிங்கய்யா!!!
காவலன் : நன்றி அய்யா!
காட்சி ஏழு - இரு மாதங்கள் கழித்து ஒரு நாள்...
பாண்டித்துரை : மன்னரே.. கங்கைகொண்டான் மன்னரே!!
கங்கைகொண்டான் : பாருங்கள் தோழரே! எப்படியாவது நான் மன்னன் வேங்கைவேந்தனை சென்றடைந்து இந்த கயவர்களை எதிர்த்து படையெடுக்க வேண்டும். என் மக்களை சிதறடித்து கொன்ற வெள்ளையனின் ரத்தம் நம் மண்ணில் விழவேண்டும். நம் தாய்மண் மீது மீண்டும் நம் கொடி நாட்டவேண்டும். இனி இந்த மண்ணில் மலரும் ஒவ்வொரு மழலையும் சுதந்திர காற்றை மட்டுமே சுவாசிக்கவேண்டும்.அடுத்த தலைமுறை பூக்காட்டை நோக்கி மகிழ்ச்சியோடு நடைபோட, நமது தலைமுறை சுடுகாட்டை நோக்கி பயணித்தால் மட்டுமே முடியும்!
பாண்டித்துரை : மன்னரே.. உலர்ந்துபோன இதழிலிருந்து நீங்கள் உதிர்த்த வார்த்தைகள் என் நெஞ்சில் நெருஞ்சி முள்போல குத்தின. இந்த நொடியே நாம் இந்த சிறையை தகர்த்தெறிந்து தப்பிக்க முயற்சிக்கலாம். ஆனால், நம்மில் ஒருவர் உயிர்கூட மிஞ்சாது.இப்பொழுதைய சூழலில் விரைந்து தாக்குவதை விட, விவேகமாய் தாக்குவதே வீரம் மன்னரே! தாக்கி ஜெயிப்பதைவிட அவர்களைப்போல் தந்திரத்தால் ஜெயிப்பதே புத்திசாலித்தனம்.காலம் கனியும்வரை காத்திருங்கள் மன்னரே! காளிதேவியிடம் சபதம் புரிந்ததுபோல் உங்களை நான் நிச்சயம் இங்கிருந்து தப்பிவிப்பேன் மன்னரே!!
காட்சி எட்டு - ஒரு வருடம் கழித்து..
நண்பன் 1: பாண்டி!! மன்னருக்கு நாளை மரணதண்டனை!
பாண்டித்துரை : ஆம்!
நண்பன் 2: அவரை தப்பிவிக்க இதுதான் சரியான சந்தர்ப்பம்!
பாண்டித்துரை : ஆமாம்! இறுதி சந்தர்ப்பமும் கூட!
நண்பன் 3: இப்பொழுது நாம் என்ன செய்வது?
பாண்டித்துரை : ஒருநாள், ஒரு மாதம் எனக்கடந்து இன்றோடு ஓராண்டு காலம் நிறைவடைகிறது. வெள்ளையரின் அசைக்க முடியா நம்பிக்கையை நாம் பெற்றுவிட்டோம்.இன்று பொழுதுசாயும்முன் நம் மன்னனை எப்படியும் நான் தப்பிவிப்பேன்!!!
ஆனால், அன்று மாலை வழக்கம் போல பாண்டித்துரை தன் தோழர்களோடு நால்வராய் எண்ணப்பட்டு சிறையிலிருந்து வெளியேறினான்!!
காட்சி ஒன்பது
இடம் - தூக்கு மரம்
மார்க்ஸ் : ம்ம்.. படிவத்தை வாசித்து தண்டனையை நிறைவேற்றுங்கள்!!
காவலன் :: பெயர் - கங்கைகொண்டான்
வயது - முப்பத்திநான்கு
குற்றம் - வெள்ளையர் அரசை எதிர்த்து பலமுறை கலகம், கொலை செய்தது
அதற்காக 1860 ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது!!!
ஆழ்ந்த சப்தத்துடன் உயிர் பிரிந்தது!!!
காட்சி பத்து
இடம் - சிந்தலக்கரை
நண்பன் : மன்னரே.. சிந்தலக்கரை வந்தடைந்தாயிற்று!! நேற்று மாலை முதல் நாம் தொடர்ந்து பயணிக்கிறோம்! பாண்டித்துரைக்காக சற்று காத்திருக்கலாமே?
கங்கைகொண்டான் : இல்லை.. இல்லை!! இந்நேரம் நம்மிடம் சொன்னதுபடி பாண்டித்துரை சிறையிலிருந்து தப்பியிருப்பான். அவன் கூறியபடியே அவனுக்காக காத்திருக்காமல், தாமதமின்றி புறப்படுவோம். வாருங்கள்!!
நண்பன் : உத்தரவு மன்னா!!
காட்சி பதினொன்று
காவலன் : அய்யா அய்யா!!! இது கங்கைகொண்டான் அல்ல.. நம் சிறைக்கு விறகுவெட்டவரும் பாண்டித்துரை!! நம்மை ஏமாற்றி மாமன்னன் கங்கைகொண்டான் தப்பிவிட்டார்!!!!
தமிழனின் சரித்திர சாதனைகள் பல இடங்களில் தலைகுனிய காரணம் - தமிழனே செய்த துரோகங்கள்!!!
தமிழனின் சரித்திர சாதனைகள் பல இடங்களில் தலைநிமிர காரணம் - தமிழர்கள் செய்த வீரத்தியாகங்கள்!!!
ஆக -
வாழ்வதில் மட்டுமல்ல..
மண்ணில்...
தலை வீழ்வதிலும் உண்டு..
வீரம் என்பது!!!
Subscribe to:
Comments (Atom)
