பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Dec 31, 2010

கவிதை பாடிட வா...

புத்தாண்டே...
ஒவ்வொரு ஆண்டும்...
மலர்வாய்...
மெல்ல வளர்வாய்..
புது மனிதரோடு..
புதுமை மனங்களோடு!


விடியலில் கூட...
இருளாய்..
ஒரு கனவாய்..
விளங்கும் கல்வியினை..
பிஞ்சுகளுக்கு..
நனவாய்..
சற்று மலிவாய்..
நீ அருள்வாய்.!



நியாயங்கள் நிலைக்காத..
நன்னாட்டில்..
பாவங்கள் இழைக்காத...
சந்தர்ப்பங்கள் பல..
நீ தருவாய்!





கல்வி சான்றிதழ் முதல்..

மணமக்கள் வாழ்விதழ் வரை..

சாதிகள் வேண்டாம் என..

கோடிடுவாய்!!!


அகிலம் விளையாடும்..
கோப்பை ஒன்றிக்கு..
இருபத்திரண்டு ஆண்டுங்கள்..
பந்தாடிடும்...
மாய மனிதர்க்கு..
மகுடஞ்சூட்டி...
அன்னைபூமி மண்ணில்..
கோடானகோடி நெஞ்சில்..
ஆனந்த மழை..
நீ பொழிவாய்!


விஞ்ஞானம் வளர்ந்த உலகில்..
இன்னும் வளராத சில..
மனித பதர்களையும்...
வளர செய்வாய்!!
 
விதிகளை மீறும் நல்லோர்க்கு..
விதி ஒன்றை..
நீ காட்டிட வா!!!

தூக்கம் தொலைத்த விழிகளுக்கு...
ஊக்கம் கொடு..
உன் வரவில்!!

ஒவ்வொரு இம்மையிலும்...
ஒரு நன்மை என்று..
மதிகெட்ட மானுடனை..
பழக்கிட வா!!

தேயும் முழுபிறையாய்
இருக்கட்டும் இனி மோதல்..
வளரும் தேய்பிறையாய்..
வாழட்டும் காதல் என்று..
கவிதை பாடிட..
புத்தாண்டே வா வா...

Dec 16, 2010

ஹலோ.. ஒரு நிமிஷம்!!

வெற்றி..தோல்வி!வாழ்க்கையில் மனிதனை வித்தியாசப்படுத்துவது இந்த வெற்றியும் தோல்வியும்தான். அது சச்சின் டெண்டுல்கராக இருக்கட்டும், சாதாரண சாமிநாதனாக இருக்கட்டும்; யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தும்.ஆனால், இந்த இரண்டுமே ஒருவனின் மனதிடத்தை பொருத்தே என்று விஞ்ஞானம் விவரிக்கிறது.

உங்கள் மனதிடம் என்பது இங்கே எதனை குறிக்கிறது? நான் வெற்றி பெற வேண்டும் என்பதையா? அல்லது நான் தோல்வி கண்டுவிடக்கூடாது என்பதையா?? "சார்... இரண்டுமே ஒன்றுதானே?" என்கிறீர்களா?? சற்றே உன்னிப்பாக கவனியுங்கள்! வித்தியாசம் காணலாம்...

"நான் வெற்றி பெற வேண்டும்" என்று நீங்கள் எண்ணும்போது உங்கள் கவனம் முழுவதும் வெற்றிக்கனி மீதே பதிந்திருக்கும். வெல்வதற்கான வழிமுறைகளை மட்டும் உங்கள் மனமும் புத்தியும் சிந்திக்கும், செயல்படுத்தும்! தோல்வியை பற்றி துளியும் நீங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை,காரணம் கவனம் வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

"நான் தோல்வி காணக்கூடாது" என்ற எண்ணம் தோல்வியடைய நேரிடும் காரணங்களை நோக்கிப் பயணிக்கிறது. கவனம் தோல்விக்கு குடை பிடிக்கும்போது வெற்றியை வெள்ளம் அடித்துச் செல்கிறது.இந்த எண்ணம் மனதில் ஒரு விதமான அழுத்தத்தை உண்டாக்குமே தவிர, அமைதியை உருக்கலைத்து விடுகிறது.

பள்ளி வாழ்க்கையில் ஒரு மாணவனுக்கு பரீட்சை என்கின்ற பாகற்காய் விதிவிலக்கல்ல. இங்கே ஒரு மாணவனின் சிந்தனை எப்படி இருக்குமென்றால் "நான் தேர்வில் வெற்றி பெற வேண்டும்" என்றோ அல்லது "இந்த தேர்வில் நான் தோற்கக்கூடாது" என்றோதான் இருக்கும்!

வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவன் திட்டமிட்டு காய்களை நகர்த்துவான். அட்டவணையிட்டு, கேள்விகளுக்கான விடை தேடி தன்னை தேர்வேன்னும் போர்க்களத்திற்கு தேற்றிக் கொள்கிறான்.

நேர்மாறாக தோல்வியடயக்கூடாது என்பவனை பயம்,தயக்கம் போன்ற மேகங்கள் சூழ்ந்து வெற்றி என்னும் அழகிய வானவில்லை ரசிக்க மறக்கின்றன."தெரியாத கேள்வி வருமோ??", "கேள்வி கடினமாக இருக்குமோ?" என்று குழப்பி எளிதான கேள்விக்கே பதட்டத்தில் தவறாக பதிலளித்து தோல்விக் கொடி நாட்டுகிறோம்.

சிந்தியுங்கள்.. தேர்விலும் சரி, வாழ்க்கையிலும் சரி, நீங்கள் "வெற்றி பெறவேண்டும் என்கிறீர்களா?" அல்லது "நான் தோல்வி கண்டுவிடக்கூடாது??" என்கிறீர்களா?? :):):)

Dec 14, 2010

சொல்ல மறந்த கதைகள்...

என்னுடைய பயணத்தில் இது ஒரு சிறப்பான தருணம்.நீண்ட இடைவெளிக்குப்பின் சில பசுமையான நினைவுகளை எழுத சந்தர்ப்பம் அமைந்ததை சந்தோஷம் என்றே சொல்ல வேண்டும்.என் எழுத்தில் கலந்திருக்கும் ஜீவனுக்கும் இந்த ஜீவனாவிற்கும் ஆயுட்கால காதல் உண்டு.ஒரு உயிரின் தொடக்கம் எப்படி தாயின் கருவில் தொடங்குகிறதோ, அப்படித்தான் என் எழுத்துக்களும் இங்கே உயிர் பெற தொடங்கியது, ஜீவனா என்ற அன்னைமடியிலிருந்து.இந்த இருபத்தியாறு அகவையிலும் நான் பயின்ற அந்த இரண்டு வருடங்கள் என்றும் என் நெஞ்சில் நீங்காதவை.அன்பான நண்பர்கள்,அக்கறை மிகுந்த ஆசிரிய சிற்பிகள் என்று பல நல்ல உள்ளங்களுக்கு நான் இப்பொழுதும் அடிமை!


அன்று 04 .07 .2001 . பொன் கிடைக்கும், ஆனால் இந்த புதன் கிடைக்காது.சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஜீவனாவில் என்னுடைய முதல் நாள்.வேடிக்கையாகவும் முடிந்த நாள்.புதிய நண்பர்கள் அறிமுகமானாலும், பள்ளியின் விதிமுறைகள் எனக்கும் என் நண்பனுக்கும் அறிமுகமாகவில்லை.கடைசி வகுப்பு முடிந்ததும்,மணியோசை கேட்டதுதான் தாமதம். எனக்கும் என் புதிய நண்பனுக்கும் போட்டி.என்ன போட்டி??பள்ளி பேருந்தை யார் முதலில் பிடிப்பது என்று!இரண்டாவது மாடியிலிருந்து புல்லிமான்களைப் போல துள்ளிக் கொண்டு ஓட்டம் பிடித்தோம்; வகுப்பறையிலிருந்தும், பள்ளியின் மூலையிலிருந்தும் யாரும் வெளிவரவில்லை என்பதை கவனிக்காமல்! 'Boys... Stop there' - ஓர் அவலக்குரல்! ஆசிரியையின் அதட்டலில் கார்ட்டூன் நிகழ்ச்சியில் வரும் டோம் அண்ட் ஜெர்ரி பொம்மையை போல ஓட்டம் கொண்ட நிலையிலேயே இருவரும் நின்றோம்!யாரும் வகுப்பறையை விட்டு வெளியே வரவில்லை என்பதை யூகித்துக் கொண்டிருந்தபோதே,எங்கள் செவியில் இசை என்னும் இன்பவெள்ளம் கரை புரள தொடங்கியது.பிறகு, ஆசிரியை அர்ச்சித்த பிறகே தெரிந்தது, தினமும் 'Meditation Period' என்று ஒன்று உள்ளது என்று!டாமிடம் மாட்டிய ஜெர்ரி போல நாங்கள் விழி பிதுங்கி நின்ற காட்சி, இன்றும் எனக்கு நகைப்பை மூட்டுகிறது.அன்றே பல அன்பர்கள் எனக்கு நண்பர்கள் ஆனார்கள்!

வேடிக்கையாக ஆரம்பித்த அந்த நாளுடன், ஆசிரியை ஒருவரை வேதனைப்படுத்திய நாளையும் இங்கே விவரிக்கவேண்டும். அதற்க்காக இப்பொழுதும் என் மனம் வருந்தும்.!!

அன்று 22.01.2002, செவ்வாய்! உணவு இடைவேளைக்கு முன் அன்று பள்ளியில் பிரார்த்தனை!நான் ஆவலோடு இந்த நாளுக்காக காத்திருந்தேன் என்பதைவிட என் நண்பர்கள் மிகவும் ஏக்கத்தோடு காத்திருந்தனர்.சரி..கதைக்கு வருவோம்.என் இயற்பியல் ஆசிரியையே எனக்கு வகுப்பாசிரியை.அவர் கூடத்தை கடந்து செல்கையில் என்னை அழைத்தார்.நண்பர்கள் அனைவரும் பிரார்த்தனைக்கு சென்றாயிற்று.நான் அப்பொழுது நடைபெற்ற தேர்வுகளில் சொல்லும்படியாக சாதிக்கவில்லை. என் கவனம் எழுத்தில் படியேறிய காலம். என்னை அக்கறையுடன் கண்டித்த முதல் ஆசிரியை.நான் பதில் ஏதும் பேசவில்லை.ஆனால், என் செயலை நினைத்து மிகவும் வருந்தினேன்.என் எழுத்தை சற்றும் குறை கூறாமல் நான் படிப்பில் தேய்பிறை ஆகிவிடக்கூடாது என்று என் நிலையை எனக்கு புரியவைத்தார்.கீழே மாணவர்கள் கைதட்டல் கேட்டு அவர் என்னை பிரார்த்தனைக்கு செல்லுமாறு கூறினார்.விடைபெற்றேன்.

மறுநாள்,அதே நேரம்,அதே சந்தர்ப்பத்தில் என் ஆசிரியை அழைத்தார்.வணங்கினேன்.

'நேற்று நீ பரிசு வாங்க மேடைக்கு செல்ல வேண்டும் என்று உனக்கு தெரியுமல்லவா?' என்றார்.


ஆமாம் என்று தலையசைத்தேன்.

'இதுதானே உனது முதல் பரிசு?' என்று கேட்டார்.

மெளனமாக மீண்டும் தலையசைத்தேன்.

முதல்நாள் என் நண்பர்கூட்டம் என்னை மேடையேற்ற கனாக்கண்டு நான் வராமல் போகவே மிஞ்சியது ஏமாற்றம்!முதன்முறையாக கவிதைப்போட்டி ஒன்றில் பங்கெடுத்து மூன்றாவது பரிசு வென்றிருந்தேன்.பிரார்த்தனை முடிந்ததும் மேடையில் நான் பரிசினை பெற்றிருக்கவேண்டும்.ஆனால்,நானோ என் ஆசிரியை மீது கொண்ட மரியாதைக்குமுன்,பரிசொன்றும் பெரிதாக புலப்படவில்லை.என் கல்வியில் மட்டுமே அக்கறை கொண்ட என் ஆசிரியைக்கு விஷயம் யார் மூலமாகவோ தெரியவந்த பிறகு,மீண்டும் இந்த அழைப்பு.

மனவருத்தம் அவர் முகக்கன்னடியில் பிரதிபலித்தது.இருவருக்கும் தர்மசங்கடமான நிலை.சிவந்த கண்கள், வருந்திய மனம் என்று அவரை என் விழிகள் படித்துக்கொண்டிருந்த அதே தருணம்,புன்னகை முகம் மலர்த்து,என் கரம் குலுக்கி,"மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!" என்றார்.

'நன்றி!' சொன்னபோது,முதல்நாள் கேட்ட கைதட்டல் மீண்டும் ஒலிப்பதுபோல் மனம் உணர்ந்தது.


இன்றும் என் ஆசிரியர்களை,என் போன்ற சிர்ப்பிகளை செதுக்கும் அந்த சிந்தனை சிற்பிகளை நினைத்து பெருமை கொள்கிறேன்.என்னை பலருக்கு ஞாபகம் இல்லாமலும் போயிருக்கலாம்.தவறில்லை!ஏனெனில்,காலம் என்னை பள்ளியிலிருந்து எங்கோ ஒரு மூலையில் தூக்கி எறிந்துவிட்டது,என் நினைவுகளை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு!என்னை போன்ற ஒவ்வொரு ஜீவன மாணவ சிற்பத்திலும் இப்படி சொல்ல மறந்த கதைகள் ஒன்றல்ல..இரண்டல்ல..ஏராளம்! கதைகள் தொடரும்... :):):)

-கார்த்திக்
ஜீவனா
(2001-2003)